Wednesday, 2 November, 2011

பரவசம்


சின்ன சின்ன அடி எடுத்து நடக்கையில்

சிவந்திடும் உன் பதத்தின் அழகை கண்டு

நிறமிழந்து விடுகின்றது என் கவலைகள் ...

ம்மா என்று நீ அழைத்திடும் அந்த ஒற்றை

சொல்லால் என் மொழிகளை பறித்துக்கொண்டு


புன்னகையை என்னில் பூசி விடுகிறாய் ..


உன் பிஞ்சு கைகள் என் முகம் தொடுகையில்

பொங்கிடும் இந்த பரவசத்தின் நிலை தான்

தாய்மையோ ??

உன் பூவிதழ்கள் அசைத்து பால் பருகையில்

எழுந்திடும் இந்த ஓசைக்கு நிகர் எந்த ஒரு

இசையும் இல்லையடி ..இசை மீட்டும் இசையும் நீதான்


எனை காணாமல்  தேடும் அத்தருணங்கள் உன்

விழிகள் வடிக்கும் கண்ணீரில் கரைந்து போகும்

என் உயிரும் .என்ன மாயம் செய்தாயோ ??


உன் முகம் பாராது இருக்கும் நிலையில்

உன் உலகம் நான் என இரு கைகள் நீட்டி

உனை தூக்க சொல்லி அழைகின்றாய் -என்

உலகம் நீ மட்டும் தான் என அறியாமல்
...

Monday, 27 December, 2010

???

 என்  நிகழ் காலங்களில் பிரதிபலிக்கும்


கடந்த காலங்களில் நீ என்னுள் வித்திட்ட

நிகழ்வுகளின் பிம்பங்கள் ...

சில மெய் பிம்பங்கலேன ....

பல பொய் பிம்பங்களாய் ....

அன்று என்னில் உறவாடிய நின் நட்பு

இன்று தலைகிழ் பிம்பமாய் ??

Wednesday, 13 October, 2010

யார் நீ

யார் நீ


யார் இவள்??
என்னுள்ளே எனை அறியாமல் நுழைந்திட்டவள்
என்னுடல் சுமக்கும் மனம் பறித்து நீ
நானாகிய எனை நீக்கி நீயாகினாய்-எனினும்
நீயாகிய உனை சுமப்பது என்னுடலாயிற்றே ..
நீயாகிய நான் தேடியது அன்பு உறவுகளை
அங்கனம் பழகிய உறவுகளுக்குள் சிறிதும்
இரக்கமின்றி உண்மைதனை புதைக்க
கற்றுக்கொடுத்தது நானாகிய நீ ...

சில நேரம் நானாகவும் பல நேரம் நீயாகவும்
என்னுடல் நீ ஆட்கொள்ளும் நாடக மேடையென
நித்தம் நீ ஆடினாய் ஆனந்த கூத்து ....
நானாகிய நான் உடல் தொலைத்து ஓலமிடுதல்
உன் நடனத்தின் இசை கூட்டுவதாய் ஒப்பனை செய்தாய் ..

அந்த ஒற்றை நள்ளிரவில் தான் மெல்ல
வீறுகொண்டது நானாகிய நான் ...
நீயாகிய நானை என்னுடல் நீக்கி
அடிப்பெயர்த்து வீசி எரிந்தது...
சொட்டும் குருதியுடன் நீ மெல்ல
உயிர் நீக்குவது கண்டு நான் கண்ணிருடன்
வழி அனுப்பி வைக்கிறது ,,,,,,


மீண்டும் நானாகிய நான் என்னுளே
புகுந்து நான் நானகினேன் ...நீயாகிய நான்
விட்டு சென்ற கால்தடங்களை என் மனதில்
இருந்து அழிக்கும் நோக்கில் அதன் பக்கம்
நெருங்கி பார்க்கின்றேன் ஒவ்வொரு கால் தடங்களின்
அடியிலும் ஒட்டி கொண்டிருக்கின்றது சில நேச உள்ளங்களின்
உண்மையான அன்பும் ,பரிமாற்றங்களும் ..உன்னால்
இழந்த அவ்வுள்ளங்களுக்காக கரைகின்றது என் உயிரும் ...

எனை இழந்து நீயாகிய நான் வாழ்ந்த நாட்களின்
கல்லறையின் மேல் கண்ணீர் வடிகின்றது
நானாகிய நான் !!!!!!!!!!!!!

Thursday, 19 August, 2010

குப்பைத்தொட்டி தரிசனம்

கால கண்ணாடியில் அழிந்துவிட்ட பாதரச முலாமாய்


கண்முன்னே மெல்ல சாகிறது குழந்தைக்கனவுகளும்

தொலையாடலில் வாரிசு எங்கே எனக்கேட்கும்

உறவின் வார்த்தைகளில் சூடுபட்டு வரிக்குதிரையின்

ஒப்பமாய் மாறிவிட்டது என் மனம்...


அம்மா என்று அழைக்க சொல்லிகொடுக்கப்பட்ட

தத்தையின் கூரிய அலகு குத்தி அர்த்தம் தொலைத்து

விதவை கோலம் கொண்டு வாடுகின்றது

என் செவி வாங்கிக்கொண்ட அதன் அம்மாக்களும்


ஏசியின் இடைவெளிக்குள் பிறந்துவிட்ட புறா

குஞ்சுகளின் சத்தம் கேட்டு விடிகின்றன என்

ஒவ்வொரு காலைகளும் புறாவாக மாற

வரம் வேண்டியவாறே ,,,,,


தோட்டத்தில் மொட்டுவிட்ட ரோஜாசெடியையும்

அதன் இலை அடியில் தொட்டில் கட்டிய

வண்ணத்து பூச்சியினையும்,சில புழுக்களை சுமக்கும்

கொத்தாய் காய்த்துவிட்ட கத்திரி செடியினையும்,

நோவின்றி வாயினால் செல்லக்கடிகடித்து மமதயாய்

குட்டிக்கு பாலுட்டும் அந்த சாம்பல் பூனையினையும்

ஏனோ ரசிக்காமல் அவைமீது கொண்ட தீராத பொறாமையின்

தீயை அணைக்க கண்ணீரை சுரக்கின்றது என் கண்களும்


அறுந்துவிட்ட வீணை கம்பிகளில் சுரம் தேடும் என்ராகங்கள்

துளையில்லா புல்லாங்குழலில் இசைதேடும் என்உதடுகள்

உளியின்றி சிலை செதுக்கும் என் கற்பனைகள்

கார்மேகம் இல்லை என அறிந்தும் மழைக்காக

ஏங்கும் என் வரண்டுவிட்ட பாலைவனங்களும்

இல்லாத கவிதைகளுக்காக அர்த்தங்கள்

எழுதும் என் விரல்களும் விரதம் கலையாமல்

ஷஷ்டியில் இருந்தும் அகப்பையில் கிட்டவில்லை

என்றாவது குப்பையில் கிட்டும் என நம்பிக்கையில்

தினம் ஒரு குப்பைத்தொட்டி தரிசனம்

Friday, 23 July, 2010

விட்டில் பூச்சி

அடி பேதை பெண்னே!!


ஆடு ராமா என்றால் தனை மறந்து ஆட
நீ என்ன மந்தியினமா??- உனை விட
மந்தி மேலடி ,,ஆடையாவது முறையாய்
அணிந்து இருக்கும் !!!!!

அன்று புராணக்கதைகள் சொல்லப்ப்ட்டது
பாவைக்கூத்து என்ற முறையில் ....இன்று பல
பாவைகள் முறையின்றி கூத்தாடுவது
ரணக்கதைகளை அனுபவிக்கத்தானோ???

அந்நிய நாட்டில் தமிழ் கலாச்சாரத்தை சிறிதும்
நியாயமின்றி கொலைச்சொய்வதும் சரிதானோ??
அச்சிட்ட சில காகிதங்களுக்காக நம் கன்னித்தமிழ்
கற்பை சூறையாடுவதும் முறைதானோ???

பரதம் ஆடினால் பரத்தை என யாவரேனும்
மொழிவரோ?? நடனம் என்ற பெயரில்
நாணமின்றி நாடகம் ஆடுவதும் ஏன் தானோ??

உனை ஆட்டுவிப்பவனும் நீ ஆடி
உன்னால் ஆட்டுவிக்கப்படுவர்களும் உன்னில்
ஆடும் வரையில் நீ ஆட்டும் வரையில் தான்
உன்னுடன் என உணர மறுப்பதும்
உணர்த்த மறுப்பதும் முறைதானோ??

வாழ்க்கையின் வளைவுகளை சந்திக்க
தைரியம் இன்றி இவ்வழியினை கண்டு
உன் வளைவுகளால் சந்தி சிரிக்கப்படுவதும்
எவ்விதம் பொருத்தமாகும் பெண்ணே???
வளைவுகளும் நீ வளைந்துவிடும் வரையில் தான்!!!

கடல் கடந்து வாழ்வில் கரையேரிடும் ஆசையில்
இக்கரைத்தனில் கரண்சியினால் நினை
கறை ஆக்கிக்கொள்கிறாய் ஆசையுடன்
வாழ்க்கை கடலில் நின் மானம் முழ்கிவிட்டதறியாமல்...

வீழ்வேன் என நினைத்தனையோ என்ற
முண்டாசு கவிஞன் சொல் தொலைத்து
விழ்ந்தே தீருவேன் என வண்ண விளக்குகளின்
ஒளியில் தன்னைத்தானே மாய்த்துக்கொள்ளும்
விட்டில் பூச்சியடி நீ!!!!!!!!!!!!!!


( அமீரகத்தில் இரவு சபைகளில் ( நடனம் ஆடும் சில தமிழச்சிக்களுக்காக.)

Sunday, 27 June, 2010

மௌனம்
உன் கண்ணில் வடியும் ஒற்றை கண்ணீர்
என் உயிரின் துளி என அறியாயோ ...

மௌனமாய் நீ செல்கையில் சிக்குண்டு

சிதறும் மனதின் மரண ஓலத்தை கேளாயோ ...

சில நேரம் எச்சில் இலை என எறிவதும்

சில நேரம் மயில் இறகாய் எனை போகிப்பதும்

என் மீதான உன் ராஜ்யத்தில் எனகென்ன

நிரந்திர பதவி என மொழியாயோ ??---------------------------------------------------------------------


உன்னை அகிம்சைவாதி என்றதன் அர்த்தம்

இன்று புரிகின்றது ஆம் நீ அகிம்சைவாதிதான்

வார்த்தையின்றி மௌனமாய் எனது

அகத்தில் இம்சை செய்யும் வாதி நீ

----------------------------------------------------------------------

உன் வார்த்தைகளால் எனை உயிர்பிப்பதும்

வார்த்தையின்றி மௌனமாய் கொல்வதும்

உனக்கென்ன கடவுள் அவதாரமென நினைவோ ??

--------------------------------------------------------------------------தேடி தேடி பார்கிறேன் வாஞ்சையாய்

எந்த அகராதியிலும் கிடைக்கவில்லை

உன் மௌனமொழிக்கான அர்த்தம்

---------------------------------------------------------------------------

உன் நெஞ்சில் வாழும் பாக்கியம் இல்லை ...

உயிர் நீத்திட விரும்புகிறேன் -அதனால்

என்னவனே மௌனமாய் இரு-ஏன் எனில்

தற்கொலை கோழையின் முடிவாம் !!!!!!!!!

Friday, 25 June, 2010

இதழ்-முத்தம் கவிதைகள்

என் பாலையில் உன்னால் அடிக்கடி


பூக்கும் உன்நினைவு மொட்டுக்கள்

முத்தமெனும் நீரை எதிர்ப்பார்த்தப்படி

----------------------------------------------------------

இதழ் குவித்து 'அப்புறம்' என்று நீ

சொல்லும் ஒற்றை சொல்லில்

ஒட்டிக்கொள்கிறது

உன் இதழுடன் என் நெஞ்சமும்

------------------------------------------------------

சுட்டெரித்த உன் ஒற்றை பார்வையில்

கரிந்து கரைந்து ஓடிய என் நாணம் இதழில்

புன்னகையாய் தவழும் சம்மதத்தின்

மொழியினை பேசியவாறு
-------------------------------------------------------
 
புரியவில்லை அன்பே.......
 
 நாம் முத்தமிடுகையில் காதலர்கள்
 
 நாமா இல்லை நம் இதழ்களா என்று
 
----------------------------------------------------------
 
அறியாமல் நீ கொடுக்கும் உன்
 
ஒற்றை முத்ததிற்க்காக ஏங்கும்
 
கண்ணா என் மனம் தினமும்...
 
மழலையின் இதழின் ஒத்தடதிற்கு
 
ஒப்புதலும் இங்குண்டோ???
 
-----------------------------------------------