Thursday, 19 August 2010

குப்பைத்தொட்டி தரிசனம்

கால கண்ணாடியில் அழிந்துவிட்ட பாதரச முலாமாய்


கண்முன்னே மெல்ல சாகிறது குழந்தைக்கனவுகளும்

தொலையாடலில் வாரிசு எங்கே எனக்கேட்கும்

உறவின் வார்த்தைகளில் சூடுபட்டு வரிக்குதிரையின்

ஒப்பமாய் மாறிவிட்டது என் மனம்...


அம்மா என்று அழைக்க சொல்லிகொடுக்கப்பட்ட

தத்தையின் கூரிய அலகு குத்தி அர்த்தம் தொலைத்து

விதவை கோலம் கொண்டு வாடுகின்றது

என் செவி வாங்கிக்கொண்ட அதன் அம்மாக்களும்


ஏசியின் இடைவெளிக்குள் பிறந்துவிட்ட புறா

குஞ்சுகளின் சத்தம் கேட்டு விடிகின்றன என்

ஒவ்வொரு காலைகளும் புறாவாக மாற

வரம் வேண்டியவாறே ,,,,,


தோட்டத்தில் மொட்டுவிட்ட ரோஜாசெடியையும்

அதன் இலை அடியில் தொட்டில் கட்டிய

வண்ணத்து பூச்சியினையும்,சில புழுக்களை சுமக்கும்

கொத்தாய் காய்த்துவிட்ட கத்திரி செடியினையும்,

நோவின்றி வாயினால் செல்லக்கடிகடித்து மமதயாய்

குட்டிக்கு பாலுட்டும் அந்த சாம்பல் பூனையினையும்

ஏனோ ரசிக்காமல் அவைமீது கொண்ட தீராத பொறாமையின்

தீயை அணைக்க கண்ணீரை சுரக்கின்றது என் கண்களும்


அறுந்துவிட்ட வீணை கம்பிகளில் சுரம் தேடும் என்ராகங்கள்

துளையில்லா புல்லாங்குழலில் இசைதேடும் என்உதடுகள்

உளியின்றி சிலை செதுக்கும் என் கற்பனைகள்

கார்மேகம் இல்லை என அறிந்தும் மழைக்காக

ஏங்கும் என் வரண்டுவிட்ட பாலைவனங்களும்

இல்லாத கவிதைகளுக்காக அர்த்தங்கள்

எழுதும் என் விரல்களும் விரதம் கலையாமல்

ஷஷ்டியில் இருந்தும் அகப்பையில் கிட்டவில்லை

என்றாவது குப்பையில் கிட்டும் என நம்பிக்கையில்

தினம் ஒரு குப்பைத்தொட்டி தரிசனம்